தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டபேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பாக சண்முகையா போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் பாலகிருஷ்ணன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது, 'தமிழ்நாட்டில் 22 தொகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகினர். அப்போதெல்லாம் தேர்தல் நடத்தவேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் எந்த கட்சியினரும் முறையிடவில்லை. ஆனால் திமுக மேற்கொண்ட முயற்சியால் நீதிமன்ற உத்தரவின்படி இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.
அதிமுகவுக்கு தோல்வி பயம் வந்துள்ளதால் அடுத்து மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய முயற்சிக்கிறார்கள்.
தூத்துக்குடியில் தங்கள் உரிமைக்காக ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்திய அப்பாவி மக்கள் 13 பேரை சுட்டுக் கொன்றனர். இப்படிப்பட்ட மோசமான ஆட்சி நீடிக்க வேண்டுமா வேண்டாமா என முடிவு செய்யங்கள். கொடுங்கோல் ஆட்சி தமிழ்நாட்டில் தேவையில்லை.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும். மக்களுக்கு வேலைவாய்ப்பளிக்கக்கூடிய தொழிற்சாலைகள் திறக்கப்பட வேண்டும்.
சுகாதாரத் துறை, பள்ளிக் கல்வித் துறை, நெடுஞ்சாலைத் துறை என அனைத்து துறைகளிலும் ஊழல் செய்யும் அதிமுக அரசு தொடர்ந்து நீடித்தால் தமிழ்நாட்டை விற்றுவிடுவார்கள்' என்று அவர் தெரிவித்தார்.