தமிழ்நாட்டில் நிலவிவரும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க அரசு பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து-வருகிறது. இருப்பினும், பொதுமக்களிடையே மழைநீர் சேமிப்பு ஆர்வம் என்பது மிகமிகக் குறைவே. பொதுமக்களிடையே மழைநீர் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும்வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், மழைநீர் சேமிப்பு, தண்ணீர் சிக்கனம் ஆகியவற்றை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாணவ மாணவியர் மூலமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு-வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கோவில்பட்டி எவரெஸ்ட் பள்ளி மாணவ மாணவியர் ஸ்கேட்டிங் செய்தவாறு மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வுப் பேரணி ஒன்றை நடத்தினர். இந்தப் பேரணியின்போது மழைநீர் சேமிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள் உணர்ந்து செயலாற்ற வலியுறுத்தப்பட்டது.
நகரின் முக்கிய வீதிகள் வழியாகப் பேரணி சென்ற மாணவ மாணவியர் குடிநீர் சிக்கனம், மழைநீர் சேகரிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இந்தப் பேரணியை காவல் ஆய்வாளர் சுதேசன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.