தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த தொழிலதிபர் சுபாஷூக்கு சொந்தமான இடம் ஆதிச்சநல்லூர் வருவாய் கிராமத்தில் உள்ளது. இந்த இடம் கூட்டு பட்டாவில் இருப்பதால் தனி பட்டா கேட்டு சுபாஷ் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மனு அளித்துள்ளார். இந்நிலையில் ஆதிச்சநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் சங்கர் கணேஷ் என்பவர் உரிய ஆவணங்கள் இருந்தும் தனிப்பட்ட வழங்க லஞ்சம் கேட்பதாக ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணனிடம் இன்று (மார்ச்.29) சுபாஷ் ஆடியோ ஆதாரத்துடன் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், பணம் தந்தால் மட்டுமே தனிப்பட்ட வழங்குவேன் எனக் கூறி, அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஏற்படுத்துவதுடன் மன உளைச்சலையும் ஏற்படுத்தியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் சுபாஷ் குறிப்பிட்டுள்ளார். புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் ராதாகிருஷ்ணன் உறுதியளித்தார்.
கோரிக்கை மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற நிலையில் தனிப்பட்டா வழங்க காலதாமதம் செய்து பணம் கேட்பதாக கிராம நிர்வாக அலுவலர் மீது தொழிலதிபர் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஆதிச்சநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் சங்கர் கணேஷ் இடம் இது குறித்து கேட்டபோது தொழிலதிபர் சுபாஷின் புகாரை மறுத்தார்.
இது குறித்து ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேசிய தொழிலதிபர் சுபாஷ், 'என்னுடைய Log ID-ல தான் இருக்கு, நீங்கள் லஞ்சம் தந்தால் தான் அதை அனுப்ப முடியும் என்று பேசிய உரையாடல் உள்ளது. லஞ்சம் கேட்டு எனக்கு போனில் அழைத்து தொந்தரவு செய்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆடியோவுடன் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளோம் என்று கூறினார்.
இதனிடையே பேசிய வழக்கறிஞர் சதீஸ், சுபாஷ் என்பவருக்கு ஆதிச்சநல்லூர் கிராமத்தில் உள்ள இடத்திற்கு ஆன்லைனில் தனி பட்டா வழங்க விண்ணப்பித்து இருந்தனர். தொடர்ந்து, விஏஓ மற்றும் சர்வேயர் உள்ளிட்டோர் இடத்தை பார்த்து ஆய்வு செய்துள்ளனர். இதற்கான பணிகள் நிறைவடைந்த போதும், அவற்றை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யாமல் செல்போனில் சுபாஷை தொடர்புகொண்டு எனக்கு பணம் கொடுத்தால் தான், நான் ஆன்லைனில் பட்டாவிற்கான வரைபடத்தை பதிவேற்றம் செய்வேன் என்று கூறி சுபாஷை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக, தாசில்தாரிடமும், சார்பு ஆட்சியரிடமும் மனு அளித்துள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: "திராவிட மாடலுக்குள் கார்ப்பரேட் மாடல்" - அமைச்சர் பிடிஆர் பேச்சால் அரசு ஊழியர்கள் அப்செட்!