தூத்துக்குடி, நாசரேத் அருகிலுள்ள வெள்ளமடம் முத்து நகரை சேர்ந்தவர் கண்ணன் (44 ). அதேப் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ். ஓராண்டிற்கு முன் கண்ணனின் மனைவியிடம் சார்லஸ் அவதூறாகப் பேசியதாகத் தெரிகிறது. இதனால் கண்ணனுக்கும் சார்லஸுக்கும் முன்விரோதம் இருந்துவந்துள்ளது.

சம்பவத்தன்று சார்லஸ் மனைவிக்கும் கண்ணன் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கண்ணன் தனது இரண்டு குழந்தைகளையும் பள்ளியில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, சார்லஸ் வழிமறித்து கண்ணனிடம் தகராறு செய்துள்ளார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி சார்லஸ் தான் மறைத்துவைத்திருந்த அரிவாளால் கண்ணனை சரமாரியாக வெட்டியுள்ளார்.
அப்போது, சார்லஸ் இரண்டு குழந்தைகளை வெட்ட முற்பட்டுள்ளார். உடனடியாக கண்ணன் குழந்தைகளின் உயிரை காப்பாற்ற அந்த வெட்டை முதுகில் வாங்கியுள்ளார். இதையடுத்து, கண்ணன் லாவகமாக அரிவாளை கைப்பற்றிய கணநேரத்தில் சார்லஸ் அவ்விடத்திலிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.
இது குறித்து நாசரேத் காவல் துறையிடம் கண்ணன் புகார் செய்யவே, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதனிடையே, படுகாயமடைந்த கண்ணன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும், தலைமறைவான சார்லஸை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.