தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு, தடியடி மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
ஒருநபர் ஆணையத்தில் இதுவரை நடந்த விசாரணையில் 1,417 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 1,037 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
1,483 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. இன்று (ஜன.24) தொடங்கி வருகிற ஜன.29ஆம் தேதி வரை 35ஆவது கட்ட விசாரணை நடைபெற உள்ளது.
35ஆவது கட்ட விசாரணை அமர்வில் ஆஜராகி விளக்கமளிக்க முன்னாள் காவல்துறை துணைத்தலைவர், தென்மண்டல காவல்துறை தலைவர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்பட ஆறு முக்கிய அலுவலர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஒருநபர் ஆணையத்தின் இன்றைய முதல் நாள் விசாரணையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவரத்தின்போது திருநெல்வேலி சரக டிஐஜி ஆக பணியிலிருந்த கபில்குமார் சரத்கார் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து நாளை (ஜன.25) தென் மண்டல காவல்துறை தலைவராக பொறுப்பிலிருந்த சைலேஷ்குமார் யாதவ், அதைத் தொடர்ந்து வரும் வியாழக்கிழமை தூத்துக்குடி மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பழுதடைந்த மின்மாற்றிகள் மாற்றப்பட்டுவிட்டதாகக் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி - களத்தில் இருப்பதோ வேற நிலை..!