தூத்துக்குடி: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மற்றும் அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் கோவில்பட்டி லாயல்மில் காலனி பேருந்து நிறுத்தம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நின்று அதிமுக வெற்றி பெரும். ஒரு வேலை இரட்டை இலை சின்னம் கிடைக்கப் பெறத் தாமதமானாலும் அதிமுக தான் வெற்றி பெறும். அதிமுகவில் பிரச்சினை உருவாகும் போதெல்லாம் இடைத் தேர்தல் திருப்பு முனையாக அமையும். திண்டுக்கல் இடைத்தேர்தல் திருப்பு முனை போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் திருப்பு முனையாக அமையும்.
இடைத்தேர்தல் நடந்து முடிந்த பிறகு அதிமுக எந்த அணியும் இருக்காது எல்லாம் ஓர் அணி தான். ஆயிரம் எதிரிகளைக் கூட சமாளித்து விடலாம், ஆனால் ஒரு துரோகியைச் சமாளிப்பது தர்ம சங்கடம். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பம்பரம் போல் சுற்றி பிரச்சாரம் மேற்கொண்டவர் எடப்பாடியார். அதனால் தான் 75 தொகுதியைக் கைப்பற்ற முடிந்தது. 2021க்கு பிறகு எடுத்த ஒற்றை தலைமை நிலைப்பாட்டை ஓராண்டுக்கு முன்னரே எடுத்து இருந்தால் நாம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து இருப்போம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓபிஎஸ்-க்கு சவால் விடுத்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி!