இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 18ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் தேசிய அளவில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில் 18 தொகுதிகளில் ஒன்றான விளாத்திகுளம் பகுதியில் அதிமுக கட்சி சார்பில் சின்னப்பன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அதேபோல், தூத்துக்குடியில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளராக கனிமொழி அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து பாஜக கட்சி சார்பில் தமிழிசை நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விளாத்திகுளம் பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்ற அதிமுக வேட்பாளர் சின்னப்பன், பொதுமக்கள் முன் பரப்புரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அப்போது தமிழிசைக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்கு பதிலாக திமுக வேட்பாளர் கனிமொழியின் பெயரைக்கூறி வாக்கு சேகரித்தார்.
பின்னர் சுதாரித்துக்கொண்ட சின்னப்பன், தமிழிசை பெயரைக் கூறி சமாளித்தார். அதிமுக வேட்பாளரின் இந்தப்பேச்சு பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.