தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள தோட்டக்கலை பயிர்களை தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை கூடுதல் இயக்குநர் தமிழ் வேந்தன் இன்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம், புதூர், அத்திமரப்பட்டியில் வாழைத் தோட்டங்களில் இருக்கும் தண்ணீரை உடனடியாக மின் மோட்டார் மூலமாக வெளியேற்ற வேண்டும். பெலிஸ்டின் என்ற மருந்தை வாழையின் வேர்பகுதிகளில் ஊற்றினால் அவைகள் மேலும் பாதிக்கப்படாமல் காப்பாற்ற முடியும் என விவசாயிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆரம்ப கட்டத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி புரெவி புயலின்போது ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 1,226 ஹேக்டேர் பரப்பளவிற்கு தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து கிராமங்கள்தோறும் வேளாண்மை துறை, வருவாய்த்துறையினர் இணைந்து கணக்கெடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று வெங்காயம், கொத்தமல்லி போன்ற பயிர்களில் சேதமடையாத பயிர்களை காப்பாற்ற குறிப்பிட்ட மருந்துகளை தெளிக்க வேண்டும். இது போன்ற அசாதாரண சூழ்நிலையில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதை கடைபிடிக்க வேண்டும். வாழை விவசாயத்திற்கு பயிர் காப்பீடு செய்வதற்கு வழி முறைகள் உள்ளன.
கடலூர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கணக்கெடுப்பு பணிகள் அனைத்துமே ஆரம்ப நிலையில் உள்ளதால் அனைத்தும் முழுமையாக முடிந்த பின்னரே முழுமையான பாதிப்பு குறித்து தெரியும். அனைத்து கணக்கெடுப்பு பணிகளும் ஐந்து நாட்களில் முடிவடையும்" என்றார்.
இதையும் படிங்க: முதலமைச்சரின் பயணம் விவசாயிகளின் அச்சத்தை போக்கியிருக்கிறது - அமைச்சர் காமராஜ்