தூத்துக்குடி: ஏரல் அருகே சாயர்புரத்தில் செயின்ட் மேரிஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி அருகே உள்ள எல்லைநாயக்கன்பட்டி பகுதியைச்சேர்ந்த காளிமுத்து மகள் சந்தியவேணி, அந்தப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று விளையாட்டு நேரத்தில் தனியாக முதலாவது மாடிக்குச் சென்ற அவர், அங்கிருந்து கீழே குதித்து உள்ளார். இதனைக்கண்ட ஆசிரியர்கள் அவரை உடனடியாக மீட்டு, தூத்துக்குடி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் மேல்சிகிச்சைக்காக மாணவி திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து சாயர்புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பள்ளியில் உள்ள விடுதியில் தங்கிப்படித்து வந்த சந்தியவேணி, கடந்த ஒரு மாத காலமாக தினமும் வீட்டிற்குச் சென்று வந்து தான் படித்துள்ளார்.
மாணவியிடம் இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்த போது, ‘தன்னை ஒரு கறுப்பு உருவம் தொடர்ந்து வருவதாகவும், அது தான் தன்னை மாடிக்கு அழைத்துச் சென்று குதித்து விளையாடலாம் என கூட்டிச் சென்றதாகவும்’ கூறியுள்ளார். அதனால், தான் குதித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதனைக் கேட்ட காவல் துறையினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு: 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஆணை