தூத்துக்குடி: தூத்துக்குடி, பாத்திமா நகர் பகுதியை சேர்ந்த 54 வயது மிக்க நபர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடியில் உள்ள திரு இருதய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். பின்னர், கடந்த மாதம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டபோது, பாசிடிவ் என வந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்றின் தாக்கமானது அதிகரித்து வருகிறது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் 20 பேர் கரோனா தொற்றுப் பரவி சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், இன்று ஒருவர் உயிரிழந்திருப்பது பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து, மேலும் அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அரசின் நெறிமுறை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடைமுறைக்கு வந்துள்ளது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டு, முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
மேலும், மருத்துவமனை வளாகத்தில் கரோனா பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புற்றுநோயால் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் கரோனாவால் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் அஞ்சிய கரோனா தொற்று மீண்டும் பரவி வருவதால் மீண்டும் தன் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்ற பயம் மக்களிடையே மேலோங்கி வருகிறது.
இதையும் படிங்க: ‘ஏழை, எளிய மக்களுக்கான எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு செய்யவில்லை’ - அமைச்சர் கீதா ஜீவன் ஆவேசம்!