தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில், போதைப்பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்வதைத் தடுக்கவும், கடல் வழியாக கடத்தப்படுவதைத் தடுக்கவும், மாவட்ட காவல் துறை சார்பாக கடும் முயற்சி எடுத்து வருகிறார்.
அதுபோல, தூத்துக்குடி மாநகரில் போதைப்பொருள் இல்லாத மாநகரமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் டவுன் டிஎஸ்பி சத்யராஜ் மேற்பார்வையில், தனிப்படையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி, எஸ்எஸ் பிள்ளை தெருவில் தனிப்படையினர் ரோந்து மேற்கொண்டு இருக்கையில், அப்பகுதியில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் சுற்றி வருவதைப் பார்த்து அவரைப் பிடித்தனர். பின்னர், அவர் கையில் சீனி போன்ற பாக்கெட்டுகள் இருந்தன. இதனைக் கண்டறிந்த காவல்துறையினர் அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், தூத்துக்குடி பூபால்ராயர்புரத்தைச்சேர்ந்த ரிகன் (41), என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்த ஒரு கிலோ எடை கொண்ட 10 பாக்கெட்டுகள் இருந்ததும் தெரியவந்துள்ளது.
அவர் வைத்திருந்த பாக்கெட்டுகளில் யூரியா போன்ற உரம் போன்று இருந்தது. இதனை போலீசார் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். இதனையடுத்து ரிகனை விசாரணைக்காக வடபாகம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் யூரியா உரம் போன்ற பொருட்களை ஹெராயன் என்று கூறி, சிலரிடம் விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. 1 கிலோ பாக்கெட் 1 லட்சம் ரூபாய் என்று அவர் பேரம் பேசியதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் இதில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா? என்று விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவாரா?; கே.எஸ்.அழகிரி சவால்