கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழ்நாடு முழுவதும் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், சில கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் அத்தியாவசியப் பொருள்கள் விற்கும் கடைகள் தவிர அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை நடைபெறுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன், கிழக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் தங்கராஜ் ஆகியோர் தலைமையில் காவலர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கோவில்பட்டி, வள்ளுவர் நகரில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் வெள்ளத்துரை என்பவரது வீட்டின் அருகே கோழி கூடாரத்திற்குள் விற்பனைக்காக சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 650 மதுபான பாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, ராமர் என்பவரைக் கைது செய்த அவர்கள், தப்பியோடிய வெள்ளத்துரையை என்பவரையும் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: இலங்கைக்கு கடத்த முயன்ற வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்!