தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர், சேர்ந்தபூமங்கலம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புன்னக்காயலை நோக்கிச் சென்ற லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் குளிர்பான பாட்டில்கள் இருந்தது, அடியில் கஞ்சா மூட்டைகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவில் இருந்த 300 கிலோ கஞ்சாவையும், லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்து, ஆட்டோவை ஓட்டிவந்த வெங்கடாசலம் (42) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த கஞ்சா மூட்டைகளை மூக்காணி பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஏற்றிவந்ததாகவும், கம்பத்தில் இருந்து அரசுப் பேருந்தில் இந்த கஞ்சா மூட்டைகள் கடத்திவரப்பட்டு, பின்னர் லோடு ஆட்டோவில் கொண்டு வரும்போது காவல்துறையிடம் சிக்கியது விசாரணையில் தெரிந்தது. இதில் புன்னக்காயலைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.