தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு போதைப் பொருள் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு தலைமையில் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜூடி மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று (ஆக.28) தூத்துக்குடி புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் ஒன்றன்பின் ஒன்றாக வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் கார்களில் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த ஞானம் மகன் ஆரோன்(31) மற்றும் அவரது மனைவி சிபானியா(31), தூத்துக்குடி பாரதி நகரை சேர்ந்த அய்யாத்துரை மகன் இசக்கி கணேஷ்(29), இலங்கை நாட்டைச் சேர்ந்த தற்போது சென்னை நுங்கம்பாக்கம் பகுதியிலிருந்த வின்சன் பினிஷ் மகன் ஜோசப் ஸ்ரீபாலன் கெனியு பினிஷ்(63).
தூத்தக்குடி அண்ணாநகரை சேர்ந்த சின்னத்துரை மகனான தூத்துக்குடி பாமக மாவட்ட இளைஞரணி தலைவர் மூக்காண்டி (எ) ராஜா(30), கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த ஜான் மகன் சஜின் ரெனி(35), திருநெல்வேலி மாவட்டம் பாட்டப்பத்து பகுதியை சேர்ந்த இசக்கிதாஸ் மகள் ஸ்ரீமதி இந்திரகாந்தி(23), சென்னை பரங்கிமலையை சேர்ந்த மாணிக்கம் மகன் தயாளன்(45), தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆசீர்வாதபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகனான சாத்தான்குளம் ஒன்றிய பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் மணிகண்டன்(32).
தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர்களான முனியசாமி மகன் காளீஷ்வரன்(24), ஈனமுத்து மகன் விக்னேஷ்வரன்(29), மாரியப்பன் மகன் திருமேனி(29), சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சம்பத்குமார்(50), கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டிணம் பகுதியை சேர்ந்த முத்து கிருஷ்ணன் மகன் சரவணன்(45) ஆகியோர் சேர்ந்து கார்களில் கஞ்சா கடத்தியது தெரிய வந்தது.
மேலும் இவர்களுடன், செல்லும் வழியில் போலீசார் இருப்பது குறித்து தகவல் தெரிவிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் வந்த தூத்துக்குடி மீளவிட்டான் ரோடு பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மகன் திருமணிக்குமரன்(27) மற்றும் தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த மந்திரம் மகன் அருண்குமார்(27) ஆகியோர் கஞ்சா கடத்துவதற்கு உதவியதும் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, மேற்படி தனிப்படை போலீசார் குற்றவாளிகளான ஆரோன், அவரது மனைவி சிபானியா, இசக்கி கணேஷ், ஜோசப் ஸ்ரீபாலன் கெனியு பினிஷ், மூக்காணி (எ) ராஜா, சஜின் ரெனி, ஸ்ரீமதி இந்திராகாந்தி, தயாளன், மணிகண்டன், காளீஸ்வன், விக்னேஷ்வரன், திருமேனி, சம்பத்குமார், சரவணன், திருமணிகுமரன் மற்றும் அருண்குமார் ஆகிய 16 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 228 கிலோ கஞ்சா, கடத்தி வருவதற்கு பயன்படுத்துப்பட்ட 2 கார்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். சுமார் 228 கிலோ கஞ்சா மற்றும் கார்களை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் பாராட்டினார். மேலும், இதுகுறித்து தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர்களில் ஆரோன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த மே 9 ஆம் தேதி அன்று ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வேலவன் புதுக்குளம் பகுதியில் ஒரு கோழிப்பண்ணையில் 2,000 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த வழக்கில் மதுரை மாவட்டம் கீரைத்துறை காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த ஆண்டில் இதுவரை கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 92 வழக்குகள் பதிவு செய்து 170 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 755 கிலோ கஞ்சா மற்றும் 34 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 நான்கு சக்கர வாகனங்கள் என 38 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 47 கஞ்சா வழக்குகளில் ஈடுபட்ட எதிரிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட மொத்தம் 80 பேரின் வங்கி கணக்குகளில் உள்ள ரூபாய் 8 லட்சத்து 4 ஆயிரம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் 8 பேர் உட்பட 106 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரபல ஆங்கில நாளேட்டில் பணியாற்றிய பெண் பத்திரிகையாளர் தற்கொலை!