தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காலை இன்று 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, 7 மணி அளவில் சடட்டப்பேரவை தேர்தலுக்காக வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கீதாஜீவன் போல்பேட்டையில் உள்ள கீதா மெட்ரிகுலேஷன் பள்ளியிலும், அதிமுக-தமாகா கூட்டணி வேட்பாளர் விஜய சீலன் சிவந்தாகுளம் சி.வ.அரசு மேல்நிலைப் பள்ளியிலும், கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி கம்யூனிஸ்ட் வேட்பாளர் சீனிவாசன் கோவில்பட்டி சாஸ்திரி நகர் அரசுப் பள்ளியிலும், விளாத்திகுளம் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் ராமச்சந்திராபுரம் அரசு பள்ளியிலும், ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகன் கவர்னகிரியில் உள்ள பள்ளியிலும், திமுக வேட்பாளர் சண்முகையா அவரது சொந்த ஊரான ஐரவன்பட்டியில் உள்ள பள்ளியில் வாக்கினை செலுத்தினர்.
தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரும் செந்தில்ராஜ் தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றினார். இதைத்தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ’’ இன்று (ஏப்ரல் 6) காலை 6 மணிக்கு அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. பின்னர், 7 மணிக்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சட்டப்பேரவைக்கான வாக்குப் பதிவுக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
வாக்குச்சாவடி மையங்களில் கரோனா அச்சுறுத்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படுகின்றன. வாக்காளர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்படுவதுடன், வெப்ப பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை வாக்குப்பதிவு மையங்களில் சரிவர வேலை செய்யாத 12 கட்டுப்பாட்டு கருவிகள், 15 வாக்குப்பதிவு எந்திரங்கள், 26 விவிபேட் கருவிகள் மாற்றப்பட்டு இருப்பு வைக்கப்பட்டிருந்த மாற்று கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
வாக்காளர்கள் பயன்படுத்திய கையுறைகள் மற்றும் பயன்படுத்தாத பொருட்களை பாதுகாப்பான முறையில் தனித்தனியே பிரித்தெடுத்து செல்லவும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
இதையும் படிங்க: மீண்டும் சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுக்கும் நடிகர் வடிவேலு!