தூத்துக்குடி: தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர்பாண்டியாபுரம் சுங்கசாவடி அருகே கடந்த ஆக.28 ஆம் தேதி அன்று 2 கார்களில் 228 கிலோ கஞ்சா கடத்தி வந்த வழக்கில் 13 பேர் உட்பட இன்னும் சிலரை தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, 228 கிலோ கஞ்சாவையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கில் கைதான பாஜக மற்றும் பாமக நிர்வாகிகள் ஆரோன், இசக்கி கணேஷ், சரவணன், மூக்காண்டி (எ) ராஜா, சஜின் ரெனி, திருமணிகுமரன், அருண்குமார், தயாளன், மணிகண்டன், காளீஸ்வரன், விக்னேஷ்வரன், திருமேனி மற்றும் சம்பத்குமார் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
தொடர்ந்து காவல் துணை கண்காணிப்பாளர் அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு, குண்டர் சடத்தில் கைது செய்யப்பட்டவர்களை மதுரை மத்திய சிறையிலும், மற்ற 12 பேரை பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் அடைத்தார்.
இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 பேர் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 25 பேர் உள்பட 137 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னிமலை இரட்டை கொலை; அதிமுக சார்பில் கடையடைப்பு போராட்டம்!