திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள கதிராமங்கலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வரதராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களைக் கண்டித்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, காரைக்கால் கொல்லுமாங்குடி செல்லும் சாலையில் கதிராமங்கலம் என்ற இடத்தில் சாலையில் விழுந்த பெரும் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்வதற்காக பாதுகாப்பு கருதி எச்சரிக்கை பலகை ஒன்றை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வைத்துள்ளனர்.
இதனையடுத்து, நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரிடம் தகவல் தெரிவிக்காமல் அறிவிப்பு பலகையை அகற்றி தூக்கி வீசி சாலையை சரிசெய்யாமலும் வைத்துள்ளனர்.
இச்சம்பவத்தைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எந்த முன் அறிவிப்புமின்றி பலகை அகற்றிய நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களைக் கண்டித்தும் சாலையை உடனே சீரமைக்க கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
இதனால் காரைக்கால் -கொல்லுமாங்குடி நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.