திருவாரூர் மாவட்டம் பெரிய மில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கராத்தே மாரிமுத்து. இவர் மீது திருவாரூர் காவல் நிலையத்தில் கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் வழிப்பறி வழக்கில் கைதாகி நாகப்பட்டினம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த 7ஆம் தேதி பிணையில் வெளியே வந்தார். ஆனால், மறு நாளே (ஜூலை 8) திருவாரூர் ரயில் நிலையத்தில் உடல் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இவருடன் பிணையில் வெளிவந்த மணி என்பவரிடம் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. நாகப்பட்டினம் கிளைச் சிறையிலிருந்து பிணையில் வந்த கராத்தே மாரிமுத்து, மணி ஆகிய இருவரையும் அதே பகுதியைச் சேர்ந்த வினோத் அவரது நண்பர்கள் வாடகை காரில் திருவாருக்கு அழைத்து வந்தனர். அனைவரும் மது போதையில் இருந்த நிலையில், மாரிமுத்துவை சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்தனர்.
பின்னர், யாருக்கும் சந்தேகம் வராத வகையில், அன்றிரவு மாரிமுத்துவின் உடலை திருவாரூர் ரயில் நிலையத்தில் தார்பாயில் கட்டிபோட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டதாக கூறியுள்ளார். கராத்தே மாரிமுத்து, பிரபாகரன், வினோத் உள்ளிட்ட அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், திட்டமிட்டு மாரிமுத்துவை பிணையில் வெளியே வரவைத்து கொலை செய்ததாக மணி கூறியுள்ளார்.
மணி அளித்த தகவலின்படி பூந்தோட்டத்தில் இருந்த வினோத்தை காவல்துறையினர் கைது செய்தனர். மாரிமுத்துவின் நண்பர்கள் 5 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவாகியுள்ள ஒன்பது பேரை தேடி வருகின்றனர். திருவாரூரில் நண்பர்களே சேர்ந்து கராத்தே மாரிமுத்துவை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 8 காவல் துறையினரை படுகொலை செய்த விகாஸ் துபே கைது! சிசிடிவி பதிவுகள்...