திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வெண்ணாற்றங்கரைப் பகுதியை சேர்ந்தவர் சுமதி. இவர் மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மகள் பிரீத்தி (21) திருமணம் ஆகாதவர். இவர் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.
அண்மையில் நடந்த போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற பிரீத்திக்கு மத்திய அரசின் தபால் துறையில் வேலை கிடைத்தது. வீட்டில் இருந்து செல்ல வெகுதூரம் என்பதால் மன்னார்குடி தாமரைக்குளம் பகுதியில் உள்ள, தனது தாத்தா வீட்டில் தங்கி கடந்த 18 நாட்களாக எடகீழையூர் கிராமத்தில் உள்ள கிளை அஞ்சலகத்தில் தபால் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தாத்தா வீட்டில் இருந்த பிரீத்தி திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அப்போது வீட்டில் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் வேதனை தாங்க முடியாமல், பிரீத்தி அலறவே அதனை கேட்ட அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். பிரீத்தி உடலில் 80 விழுக்காடு தீக்காயங்கள் இருந்ததால் அவர் உடனடியாக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேற்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், 'பூர்வீக இடத்தை பிரீத்தியின் தாய் சுமதி விற்க முயற்சித்துள்ளார். இதற்கு பிரீத்தி எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தாய்க்கும், மகளுக்குமிடையே தொடர்ந்து பிரச்னை வந்துள்ளதாகத் தெரிகிறது. சில நாட்களாக பிரீத்தி இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். பிரீத்தி வேலைக்கு சேர்ந்து விட்டாலும் அவர் இன்ஜினியரிங் படிப்பை தொடர்ந்தார்.
சிலநாட்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் தனியார் கல்லூரிக்கு பிரீத்தி தேர்வு எழுத சென்றபோது தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளார். இது அவரது காதலனுக்குப் பிடிக்கவில்லை. காதலன் பிரீத்தி மீது சந்தேகப்பட்டு இருவரும் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.
பிரீத்தி குடும்ப பிரச்னைக் காரணமாக தீக்குளித்தாரா.? அல்லது காதலால் தீக்குளித்தாரா..? இல்லை தபால் நிலையத்தில் வேலை நெருக்கடி காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டாரா..? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்' என தெரிவித்தனர்.
மிகவும் தனிமையில் தவித்து வாடும் இளைஞர்கள், எதையும் எளிதில் புரிந்துகொள்ள முடியாத பயங்கரமான கலக்கம் தற்கொலைதான். தற்கொலை தீர்வல்ல நீங்கள் தற்கொலை எண்ணங்களில் இருந்து மீள 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசவும். இது தவிர தமிழ்நாடு ஹெல்ப்லைன் 104 எண்ணிற்கும் தொடர்பு கொண்டு பேசலாம்.