திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில், மேட்டூர் அணை கடந்த ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் என்பதை நம்பி இந்தாண்டு 80,000 ஏக்கர் பரப்பளவில் நேரடி நெல் விதைப்பிலும் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடவு நெல் சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது மேட்டூர் அணையில் குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்படுவதால் கடை மடை மாவட்டமான திருவாரூர் மாவட்டத்திற்கு குறைந்த அளவு தண்ணீர் வந்து செல்கிறது. ஒரு மாதத்திற்கு ஒருமுறை தண்ணீர் வருவதால் நெற் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே சோழங்கநல்லூர் கிராமத்தில், அடப்பாறு பாசனத்தை நம்பி விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை தண்ணீர் திறந்து இரண்டு மாத காலத்திற்கு மேலாகியும், மூன்று முறை மட்டுமே வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி உள்ளதாகவும் கடந்த 20 நாட்களாக தண்ணீர் வைக்காத காரணத்தினால் நெற் பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தற்பொழுது, குறைந்த அளவு தண்ணீர் செல்வதால் அதனை வசதியுள்ள விவசாயிகள் மட்டும் இன்ஜின் வைத்து தண்ணீரை வயலுக்கு பாய்ச்சி வருகின்றனர். இதனால் கூடுதலாக ஒரு ஏக்கருக்கு 1500 ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளதாகவும், விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதேபோன்று அகரவயல், புழுதிக்குடி, சோமாசி, சிதம்பர கோட்டகம், ஆண்டிக்கோட்டகம் உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2,500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி முற்றிலுமாக கருகி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் சோழங்கநல்லூர் பகுதியில் தனது விளை நிலத்தில் மண்டியுள்ள களையை எடுப்பதற்கு கூட வயலில் ஈரப்பதம் இல்லாத சூழ்நிலையால் பெண் விவசாயி ஒருவர் அருகில் உள்ள வாய்க்காலில் இருந்து அன்னக்கூடை மற்றும் பிளாஸ்டிக் வாளி மூலம் தண்ணீர் எடுத்து வயலில் தெளித்து வருகிறார்.
மேலும், வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் குறைந்த அளவு ஆறுகளில் வருவதால் இயந்திரம் வைத்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சியும் மீண்டும் ஒரே வாரத்தில் காய்ந்து நெற்பயிர்கள் சோர்ந்து போகும் நிலை ஏற்படுவதால் களை அதிகம் மண்டி 50 ஆட்களை கொண்டு களை எடுத்தும் பயனில்லை.
வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வருவதால் 100 லிட்டர் டீசல் செலவு செய்து இன்ஜின் மூலம் வயலுக்கு தண்ணீர் வைத்துள்ளோம். அரசு டீசல் மானியம் கூட வழங்குவதில்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் குறை வைக்காமல் காவிரி நீரை திறந்து விட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க:போலீஸ் ஸ்டேஷன் எப்படி செயல்படுகிறது.. கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி!