திருவாரூர் நகராட்சி மடப்புரம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலமாக நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட குடிநீரில், கழிவுநீர் கலந்து வந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
இதையடுத்து, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் இன்று வரை சுமார் 70க்கும் மேற்பட்டோர் வாந்தி வயிற்றுப்போக்கு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேருக்கு காலரா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் கொண்டுவந்து நகர்ப்பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டது.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் ஆய்வு செய்து வருகிறார். மேலும் இதில் பாதிப்புக்குள்ளாவர்களை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் கூறுகையில், நகராட்சி குடிநீர் குடித்து பாதிப்புக்குள்ளான பகுதிகளில் சிறப்பு மருத்துவக் குழுக்கள் அமைத்து பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருகிறோம் என்றார்.