கடந்த சில நாள்களாக தொடர்மழை காரணமாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிகளவு தண்ணீர் பெருகியோடியதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் இன்று அதன் முழு அளவான 120 அடியை எட்டியது. கடந்த சில மாதங்களில் மேட்டூர் அணை மூன்றாவது முறையாக அதன் முழு நீர்மட்ட அளவை எட்டியுள்ளது.
இதனிடையே ஆறுகள், நீர்வழிப் பாதைகளைச் சரியாக தூர்வாராததால் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் வராத சூழ்நிலை நிலவிவருகிறது. மழைக் காலங்களில் நீரை முறையாக குளங்களில் சேமித்து வைத்து கோடைகாலங்களில் பயன்படுத்தலாம். மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் பயன்படுத்தலாம். ஆனால் அரசு நீர் சேமிப்புக்கு எந்தவித முறையான நடவடிக்கையும் எடுக்காமல் ஒவ்வொரு முறையும் தண்ணீரானது வீணாகக் கடலில் விரயமாகிறது என்று விவசாயிகள், சமூக செயற்பாட்டாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நீர் சேமிப்பில் அரசு முறையான வரைமுறை செய்து தண்ணீரை மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பயன்பட வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தடுப்பணை கட்டுமான பணிகளில் முறைகேடு: கொதிக்கும் விவசாயிகள்