திருப்பத்தூர் : வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் செப்டம்பர் 10ஆம் தேதி மனித நேய ஜனநாயக கட்சி முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் கஞ்சா பதுக்கல் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், குற்றவாளிகளை பிடிக்க நகர காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது தலைமறைவாக இருந்த பீப்பா என்கின்ற தாஜுத்தீன் வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் உள்ள இடத்தில் பதுங்கி இருந்த போது போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் 19 பேர் சிறையில் உள்ளனர்.
சிறையில் உள்ள காலு (எ) தஸ்தகீர் என்பவரை தடுப்புகாவல் குண்டர் சட்டத்தில் சிறையில் வைக்க திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் இதுவரை மூன்று பேர் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.