தமிழ்நாட்டில் புலிகள் சரணாலயம், யானைகள் சரணாலயம் பறவைகள் சரணாலயத்தை பார்த்திருப்போம். ஆனால் வவ்வால்களுக்காக ஒரு காட்டையே உருவாக்கி சரணாலயம் போல பாதுகாத்து வருகின்றனர் கிராம மக்கள். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஆணைக்குப்பம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் நான்கு புறமும் வயல்கள் சூழ்ந்து நடுவில் வைராணி திடல் ஒன்று அமைந்துள்ளது.
இலுப்பை மரம், ருத்ராட்ச மரம், பனை மரம் ஆலமரம், அரசமரம் உள்ளிட்ட மரங்களால் சிறிய காடுகளாக இருந்த வைராணி திடலை, புதிய மரங்களை நட்டு பெரிய காடுகள் போல் உருவாக்கியுள்ளனர் கிராம மக்கள். இந்த வைராணி திடலில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பழந்தின்னி வவ்வால்கள் வாழ்ந்து வருகின்றன.
வவ்வால்கள் அனைத்தும் பகல் நேரம் முழுவதும் இந்த காடுகளில் உள்ள மரங்களில் தலைகீழாக தொங்கியபடியே ஓய்வு எடுத்துக்கொண்டு, மாலை 6 மணிக்கு மேல் வேட்டைக்கு செல்கின்றன. ஆலம்பழம், வேப்பம் பழம், கொய்யா பழம் உள்ளிட்ட பழ வகைகளை மட்டும் உட்கொள்வதால் இவை பழந்தின்னி வவ்வால் என்று அழைக்கப்படுகிறது.
வவ்வால்களை விரட்டாமல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆணைக்குப்பம் கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர். அதற்காக வைராணி திடலின் நடுவில் அய்யனார் கோயில் ஒன்றையும் கட்டி வழிபட்டு வருகின்றனர். கை தட்டினால் பறந்து போய்விடும் என்பதால், வவ்வால்களின் பாதுகாப்பு கருதி தீபாவளி, பொங்கல், கோயில் திருவிழா காலங்களில் மேளதாளம், வெடி போன்ற செயல்களை செய்யாமல் ஆணைக்குப்பம் மக்கள் பாதுகாத்து வருகின்றனர். இந்த பழந்தின்னி வவ்வால்களை அவ்வப்போது வேட்டையாடும் நரிக்குறவர்கள், சமூக விரோதிகளை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்து விடுவதாக அப்பகுதி தெரிவிக்கின்றனர்.
நவராணி திடலில் தங்களது தாத்தா, பாட்டி காலம் முதலே இந்த பழந்தின்னி வவ்வால்கள் வாழ்ந்து வருவதாகவும், அதனால் வாழையடி வாழையாக தாங்களும் வவ்வால்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறோம் என்று நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர் கிராம மக்கள்.