திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் ஆற்றங்கரை தெருவில் சுமார் 50 குடும்பங்கள் வசித்துவருகின்றன. இங்கு 80 வாக்குகள் உள்ள நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக சாலை வசதி, குடிநீர் வசதியின்றி சிரமப்பட்டுவருவதாகக் கூறுகின்றனர்.
இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால், ஆத்திரமடைந்த அப்பகுதி கிராம மக்கள் உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு பலகையை ஊர் வாயிலில் வைத்துள்ளனர்.
மேலும் கிராமத்தினர் பேசுகையில், சமூக செயற்பாட்டாளர் எனக் கூறிக்கொண்டு சுற்றும் ஒருவர் அரசு அலுவலரின் பெயரை தவறாகப் பயன்படுத்தி எங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை செய்யவிடாமல் தடுத்துவருவதாகக் கூறுகின்றனர். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்ததில் யாருடைய நிர்பந்தமும் இல்லை' - மாஃபா பாண்டியராஜன்!