திருவாரூர்: பெருகவாழ்ந்தான் அருகே மேட்டாங்குளம் கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல கோரையாற்றின் மேல்கரை பகுதியில் உள்ள ஆபத்தான ஒத்தையடி பாதையை வழியாக பயணிக்க வேண்டும்.
இங்கு ஒரு பெட்டிக்கடை கூட இல்லை. இக்கிராமத்தில் உள்ள மாணவ, மாணவியர்கள் கல்வி பயில 3 கிலோ மீட்டர் தொலைவில் தேவதானம் என்ற கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
மாணவ- மாணவிகள் அவதி
கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் 5 கிலோ மீட்டர் தொலைவில் பெருகவாழ்ந்தான் எனும் கிராமத்திற்கு சென்று அங்கிருந்து பேருந்து மூலம் மன்னார்குடி அல்லது திருத்துறைப்பூண்டி பகுதிக்கு செல்ல வேண்டிய நிலையில் இருந்துவருகின்றனர்.
இதன் காரணமாக பெற்றோர் தங்களது பிள்ளைகளை கல்லூரி படிப்பினை தொடர அனுமதிப்பதில்லை.
தனித்தீவு போல் காட்சி
உடல்நிலை சரியில்லாத முதியவர்களை சிகிச்சைக்காக கட்டிலில் படுக்கவைத்து, தேவதானம் என்ற கிராமம் வரை அப்பகுதியினர் தூக்கிச் செல்கின்றனர். கர்ப்பிணிகள் அவர்களது உறவினர்கள் வீடுகளில் தங்கவைக்கப்படுகின்றனர்.
மேட்டாங்குளம் கிராமம் மழைக் காலங்களில் தனித்தீவு போல் காட்சியளிக்கிறது. திருமண வயதுடையவர்களுக்கு வரன்கள் வருவதில்லை. இரவில் பூச்சித் தொல்லையால் அப்பகுதியினர் அச்சப்படுகின்றனர்.
மேலும் புகார் அளித்தும் அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகள் கிராமத்திற்கு வருவதில்லை எனக் குற்றஞ்சாட்டுகின்றனர். இங்கு கடந்த 3 தலைமுறை காலமாக அடிப்படை வசதிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை