திருவாரூர் மாவட்டம் அலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கையன். இவர் கடந்த 30 ஆண்டுகளாக பசுக்கள் வளர்த்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகிறார். இதுவே அவரது வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது.
இந்நிலையில், நேற்று அவருக்கு சொந்தமான பசு ஒன்று அருகில் உள்ள வயல் பகுதியில் வழக்கம்போல் மேய்ச்சலுக்குச் சென்றுள்ளது. காலை மேய்ச்சலுக்குச் சென்ற பசு மாலை வரை வீடு திரும்பாததால் மாட்டின் உரிமையாளர் தங்கையன் அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளார்.
அப்போது அவரது பசு பருத்தி பயிரிடப்பட்டுள்ள வயலில் காலில் இரத்தம் வடிந்த நிலையில் வெட்டுக்காயத்துடன் படுத்துக் கிடந்ததுள்ளது. இதனையடுத்து, தங்கையன் பசுவை மீட்டு உடனடியாக கால்நடை மருத்துவரை அழைத்து வந்து சிகிச்சை அளித்துள்ளார்.
மேலும், தங்கள் வாழ்வாதாரமாகவும் குடும்பத்தில் ஒருவர் போல விளங்கக்கூடிய மாட்டை வெட்டியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பசுவின் உரிமையாளர் தங்கையன் திருவாரூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து திருவாரூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.