திருவாரூர் பெரிய மில் தெருவைச் சேர்ந்தவர் கராத்தே மாரிமுத்து. இவர் மீது திருவாரூர் காவல் நிலையத்தில் கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவர் சமீபத்தில் வழிப்பறி வழக்கில் கைதாகி நாகப்பட்டினம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த 7ஆம் தேதியன்று மாலை ஜாமினில் வெளிவந்த நபர் திருவாரூர் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து திருவாரூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
விசாரணையில் கராத்தே மாரிமுத்துவின் நண்பர்கள் ஒன்பது பேர், மாரிமுத்துவை ஜாமீனில் எடுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மணி, வினோத் ஆகியோரை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் மாரிமுத்து தொடர்ந்து நண்பர்களிடம் பிரச்னை செய்து வந்ததால் திட்டமிட்டு ஒன்பது பேரும் சேர்ந்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். அதனையடுத்து மற்ற நபர்களை காவல் துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் தேடப்பட்ட குற்றவாளிகள் மரகத வேல், ராஜபாண்டியன் பிரபாகரன், திலீபன்பதி, வினோத், ஹசன்முகமது பிரசாந்த், உள்ளிட்ட ஏழு நபர்களும் தஞ்சாவூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இவர்கள் அனைவரையும் வருகிற 28ஆம் தேதி வரை தஞ்சாவூர் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். சரணடைந்த அனைவரும் கொலை செய்யப்பட்ட மாரிமுத்து வசித்த அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் மாரிமுத்துவின் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்ததும் தெரியவந்தது.
இதையும் படிங்க: 30 ஆண்டுகள்... 62 வழக்குகள்... யார் இந்த விகாஸ் துபே?