திருவாரூர் மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு விவசாயிகள் 3.7 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியில் ஈடுபட்டு வந்த நிலையில், விவசாய நிலங்களுக்கு முன்கூட்டியே பயிர் காப்பீடு செய்து வைப்பது வழக்கம். நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு வேளாண் துறை செயலர் ககந்தீப் சிங் பேடி நாளைக்குள் (நவ.25) விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என அறிவித்துள்ளார்.
நிவர் புயல் நாளை (நவ.25) கரையை கடக்கும் என அரசு எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தமிழ்நாட்டில் பயிர் காப்பீட்டு தொகையை மாநில அரசு நேரடியாக வழங்கி வந்த நிலையில், தனியார் நிறுவனமான ஹிப்க்கோ டோக்கியோ பயிர் காப்பீடு நிறுவனம் விவசாயிகளுக்கு காப்பீடு வழங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

காப்பீட்டுக்கான கடைசி நாள் நவம்பர் 30 என்ற போதிலும், நிவர் புயல் கரையை கடக்க உள்ளதால் நவ.25ஆம் தேதி என வேளாண் துறை செயலர் ககந்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் விவசாயிகளுக்கு எந்தவித பலனும் அளிக்க போவதில்லை. இதில், 60 விழுக்காடு விவசாயிகள் மட்டுமே பயன்பெறுவார்கள் மீதமுள்ள 40 விழுக்காடு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
கிராம கூட்டுறவு வங்கிகளில் பயிர் காப்பீடு செய்ய சென்றால், இணையதள பிரச்னை என்றும், வேலைசுமை அதிகம் இருப்பதாக கூறி அலுவலர்கள் அலைக்கழிக்கின்றனர். எனவே, தமிழ்நாடு அரசு அறிவித்த நவ. 30ஆம் தேதியை கடைசி நாளாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து