திருவாரூர் அருகே அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அமெரிக்கா செல்வதால் தமிழ்நாட்டிற்கு எந்தப் பயனுமில்லை.
ஆட்சியில் இருக்கும்வரை மக்கள் வரிப்பணத்தில் ஊரைச் சுற்றலாம் என்ற எண்ணத்தில் அமைச்சர்கள் வெளிநாடு சென்றுவருகின்றனர். மேலும், தமிழ்நாடு அரசின் மிரட்டல் காரணமாகவே மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாகத் திரும்பப் பெற்றுள்ளனர்.
மருத்துவர்களின் கோரிக்கை நியாயமானது, அதனை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சுஜித் விவகாரம் தமிழ்நாட்டிலும் சரி இந்தியாவிலும் சரி இனிமேல் நடக்காமலிருக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இந்த விவகாரத்தை பேசி நான் அரசியலாக்க விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.
மேலும், 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உள்ள டிடிவி தினகரன், சசிகலாவைத் தவிர யார் வந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம்' என்ற தங்கமணியின் கருத்து குறித்த கேள்விக்கு, அவரைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: மருத்துவர்கள் மீதான பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை நீக்கம் - விஜய பாஸ்கர்