திருவாரூர்: குடவாசல் அருகே கோவில்பத்து மாதா கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ்குமார் (23), ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது பெற்றோர்கள் தங்களது சொந்த வயலில் பருத்தி விவசாயம் செய்து வருகின்றனர்.
கரோனோ தொற்று காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிக்குச் செல்லாமல், வீட்டில் இருப்பதற்கு வயலில் பருத்தி எடுக்கலாமே என்று பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த சுரேஷ்குமார் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் சுரேஷை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் இச்சம்பவம் குறித்து குடவாசல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சுரேஷின் உடல் உடற்கூராய்விற்குப் பிறகு, அவரது சொந்த ஊரான கோவில்பத்து கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டது.
இதையடுத்து அவரது உடலை மயான பூமிக்குச் சுமந்து செல்லும் வழியில் ஆற்றினை கடக்க பாலம் வசதியில்லாததால், ஆற்றில் கழுத்தளவு நீரில் நீந்திக் கொண்டு சுமந்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரிவாளால் தாக்கும் இளைஞர்கள்: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்!