திருவாரூர் மாவட்டம் சித்தாடி, பருத்தியூர் ஆகிய கிராமங்களில் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பாலங்களை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று (ஜூலை18) திறந்துவைத்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருவாரூர் மாவட்டம் முழுவதும் 2009 சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணிகளுக்கு 900 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் இதுவரை 80 விழுக்காட்டிற்கும் மேலான பணிகள் நிறைவடைந்துள்ளன.
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் செயல் என்பது ஒரு மோசமான போக்கு. சாதி-மாத ரீதியில் பொதுமக்களின் மனதை புண்படுத்தும் வகையில் யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில் பெரியார் சிலை அவமதிப்பு என்பதும் தவறுதான். இவர்கள் இருவருமே கண்டிக்கப்பட வேண்டியவர்கள்" என்றார்.
இதையடுத்து, கரோனா தொற்றால் பாதிக்கப்படும் அமைச்சர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் காமராஜ், "தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை என்று வேறுபடுத்தி பார்க்க வேண்டாம். அரசு மருத்துவமனையில் கூடுதலான எண்ணிக்கையில் நோயாளிகள் இருப்பதால் அமைச்சர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.
இதனால் மற்ற நோயாளிகளுக்கு சிரமம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காவே தனியார் மருத்துவமனையில் அமைச்சர்கள் சிகிச்சை பெறுகிறார்கள்" என்றார்.
இதையும் படிங்க: சென்னையில் கரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ. 400 கோடி செலவு - மாநகராட்சி ஆணையர் தகவல்