திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள தலையூர், கதிராமங்கலம், பூங்காவூர், குருங்குளம் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் செயற்கை முறையில் சம்பா தாளடிப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், தலையூர் பகுதியின் நடுவே இரண்டு ஏக்கர் பரப்பளவில், ராஜா என்ற விவசாயி, இயற்கை முறையில் கருப்பு கவுனி நெல் சாகுபடி செய்துவருகிறார். தனது வயலின் நான்கு புறமும் செயற்கை முறையில் விவசாயம் செய்துவரும் விவசாயிகள் மத்தியில், நான்கு ஆண்டுகளாக புது புது நெல் ரகங்களை சாகுபடி செய்துவருவதாகக் கூறுகிறார்.
இயற்கை லாபமும் தருகிறது
தற்போது, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் பெய்துவந்த கனமழையின்போது சம்பா தாளடி நெற்பயிர்கள் சேதமடைந்து வயலில் முளைக்கத் தொடங்கின. ஆனால், இயற்கை முறையில் செய்யப்பட்ட கருப்பு கவுனி நெற்பயிர்கள் முழுவதும் எந்த ஒரு சேதமும் இல்லாமல் கம்பீரமாக நிமிர்ந்து நிற்பதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ராஜா.
மேலும், இயற்கை முறையில் செய்யக்கூடிய நெல்லின் விலை கூடுதலாக கிலோ ஒன்றுக்கு 150 முதல் 170 ரூபாய்க்குப் போவதால் விவசாயிகளுக்கு லாபம் அதிகளவில் தரும். எனவே, அனைத்து விவசாயிகளும் இயற்கை முறைக்கு மாற வேண்டும் என ராஜா கோரிக்கைவிடுத்துள்ளார்.
எனவே, தமிழ்நாடு அரசு இயற்கை முறை விவசாயம் குறித்து பொதுமக்களிடையேயும் விவசாயிகளிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்தி இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க முன் வர வேண்டும் என்று இயற்கை விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அறுவடை முடிந்தும் சோகம்; நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரிக்கை