திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தையடுத்து ஆண்டிபந்தல் என்ற பகுதியில் நன்னிலம் காவல் ஆய்வாளர் விசித்ர மேரி தலைமையில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை காவல் துறையினர் மறித்தபோது அதில் இருந்தவர்கள் காரை நிறுத்தாமல் வேகமாகச் சென்றனர்.
உடனே காவல் துறையினர் அந்தக் காரை விரட்டிச் சென்று மகிழஞ்சேரி என்ற ஊரில் மடக்கிப் பிடித்து ஓட்டுநரை விசாரணை செய்தனர். விசாரணையில் காரை ஓட்டிவந்தது உபயவேதாந்தபுரம் ஊரைச் சேர்ந்த கந்தன் (38) என்றும் காரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட கந்தன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதேபோன்று பேரளம் பகுதியிலும் 800-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை ஆம்னி வாகனத்தில் கடத்திச் சென்றவர்கள் குறித்தும் விசாரணை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடையில் விற்பனை செய்த வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்