திருவாரூர் மாவட்டம் முழுவதும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா தாளடி பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது பல்வேறு இடங்களில் அறுவடை பணிகள் தொடங்கி விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், விவசாயிகள் நெல் மூட்டைகளை 10 நாள்களுக்கு மேலாக அடுக்கி வைத்து காத்திருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இதில் குறிப்பாக மன்னார்குடி அருகே உள்ள கோட்டூர், மேலப்பனையூர், திருவண்டுதுறை, தட்டான்கோவில், நன்னிலம் அருகே உள்ள திருமீச்சூர், காளியாகுடி, வேலங்குடி, ஆண்டிபந்தல் உள்ளிட்ட பகுதிகளிலும், இதேபோல் திருத்துறைபூண்டி பல்வேறு இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் குவிந்து கிடக்கின்றன. அதுமட்டுமின்றி, நெல் மூட்டைகளை கடந்த 10 நாள்களுக்கும் மேலாக அடுக்கி வைத்து காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் விவசாயிகள் கேட்டபோது, இன்று அல்லது நாளை திறப்பதாக கூறி காலம் கடத்தி வருவதாக தெரிவிக்கின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் உடனடியாக திறந்து விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க...ஜெ. நினைவிடம் மூடப்பட்டது ஏன்? - அமைச்சர் ஓ.எஸ். மணியன் விளக்கம்