திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமை தாங்கி பேசுகையில், “வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கவுள்ள சூழலில் நாம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மழையின்போது மக்களைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு வருவதற்கான அனைத்து வசதிகளும் மற்றும் தங்க வைப்பதற்கான முகாம்கள் பாதுகாப்பானதாக இருக்கிறதா எனவும், போதுமான வசதிகள் இருக்கிறதா என்பதை அலுவலர்கள் இப்பொழுதே ஆய்வு செய்து தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு குடிநீர், உணவு உடனடியாக கிடைக்கும் வகையில் உணவுப் பொருட்களின் இருப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும். கரோனா தொற்று நிலவுகின்ற இச்சூழலில் அதற்கேற்ப அரசு அறிவுரைகளைக் கடைப்பிடிக்கின்ற வகையிலும் சுகாதார நடவடிக்கைகளை அமைந்திட வேண்டும்.
மேலும் மழைநீர் தேக்கும் பகுதிகளிலிருந்து நீரை வெளியேற்ற மோட்டர் பம்புகளை தயார்ப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். சாலைகளில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தத் தேவையான மரம் அறுக்கும் கை இயந்திரங்களைச் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.
இதில், அந்தந்த மருத்துவமனை நிர்வாகம் அவசரக் கால தேவைக்கேற்ப பாம்பு மற்றும் தேள் கடி போன்ற உயிர் காக்கும் மருந்து உள்ளிட்டவற்றைத் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்த வேண்டும். அந்தந்த துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பேரிடர் மீட்புப் பணிகளில் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றிச் செயல்பட வேண்டும்” என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை, மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.