தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி தமிழ்நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை உடுத்தி, பொங்கல் வைத்து வழிபாடு செய்து நாளை தொடங்குவது வழக்கம். அந்த வகையில், பொங்கல் திருநாளுக்கு முக்கியமான, தித்திப்பான சர்க்கரை பொங்கலை எளிமையாக குக்கரில் எப்படி செய்து என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- பச்சரிசி- 1/2 கப்
- பாசிப் பருப்பு - 1/4 கப்
- பொடித்த வெல்லம் - 1 கப்
- நெய் - 1/2 கப்
- துருவிய தேங்காய் - 1/2 கப்
- இடித்து வைத்த ஏலக்காய் - 3
- பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை
- ஜாதிக்காய் துருவியது - 1 சிட்டிகை
- முந்திரி, காய்ந்த திராட்சை - தேவையான அளவு
- தண்ணீர் - 3 கப்
சக்கரை பொங்கல் செய்முறை:
- அடுப்பில் ஒரு குக்கரை வைத்து சூடானதும், பாசிப்பருப்பை பொன்னிறமாகும் வரை வறுத்து அடுப்பை அணைக்கவும். பின்னர், அதனுடன் அரிசியை சேர்த்து கலந்து தண்ணீரால் கழுவவும்.
- இப்போது, இதில் 3 கப் தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்களுக்கு ஊறவைத்து விடுங்கள். 20 நிமிடங்களுக்கு பிறகு, குக்கரில் விசில் போட்டு, மிதமான தீயில் 4 விசில் விடவும். இதற்கிடையில், அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, பொடித்து வைத்த வெல்லம் மற்றும் கால் கப் தண்ணீர் ஊற்றி கரைக்கவும்.
- பாகு தயாரானதும் அடுப்பை அணைத்து வடிகட்டு வைத்துக்கொள்ளுங்கள். இப்போது, குக்கரில் வைத்த சாதம் மற்றும் பொங்கல் நன்கு பக்குவமாக வெந்து வந்ததும், கொஞ்சமாக நெய் சேர்த்து மசித்து விடுங்கள்.
- பின்னர், அடுப்பை மிதமான தீயில் வைத்து வடித்து வைத்துள்ள வெதுவெதுப்பான வெல்லப்பாகை சேர்த்து கலந்து விடவும். அதனுடன், நெய்யில் வறுத்த தேங்காய் துருவல், இடித்து வைத்த ஏலக்காய் மற்றும் கோயிலில் வழங்கப்படுவதை போல மணமாக இருக்க பச்சை கற்பூரம் மற்றும் ஜாதிக்காய் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். (பொங்கல் கெட்டியாக இருந்தால், சுடுநீரை கொஞ்சமாக ஊற்றவும்).
- இப்போது, அடுப்பில் ஒரு கடாயை வைத்து நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து வறுத்து குக்கரில் சேர்த்தால் அருமையான மற்றும் ஈஸியான சர்க்கரை பொங்கல் ரெடி...
இதையும் படிங்க: பொங்கல் பானையில் சர்க்கரை பொங்கல்..இந்த தை பொங்கலுக்கு பாரம்பரிய முறையில் செய்து அசத்துங்கள்!