திருவாரூர் மாவட்டம் முழுவதும் 26ஆம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மாவட்டம் முழுவதும் மதியம் ஒரு மணி வரை மட்டுமே பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்டு வந்தனர். குறிப்பாக நகர்ப்புறங்களில் அத்தியாவசிய பொருள்களை வாங்கிச் செல்வதற்காக மூன்று விதமான வண்ணங்களில் அச்சடிக்கப்பட்ட அட்டை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் பொதுமக்கள் கடை வீதிக்கு வந்து செல்லும் வகையில் பகுதி பகுதியாக பிரித்து அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமையில் பொதுமக்கள் வந்து செல்ல அனுமதிக்கப்படும் அட்டைகள் ஏதும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் சற்றுமுன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாளை 26ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும். இதில் மருந்தகங்கள் மட்டுமே திறக்கப்படும். மற்ற அனைத்து கடைகளும் திறக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது. அவசர மருத்துவ தேவைக்காக மட்டுமே பொதுமக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு பொதுமக்கள் மிகுந்த ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் நகர்புறங்களில் மட்டும் மக்கள் கடை வீதிகளுக்கு வந்து செல்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு மூன்று வண்ண அட்டைகள் வழங்கப்பட்டு அவர்கள் வரவேண்டிய நேரத்தில் வந்து செல்லவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை ஒருநாள் முழுவதும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க... திருவாரூரில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 9,566 பேர் கைது