திருவாரூர் மாவட்டம், தலையாமங்கலத்தைச் சேர்ந்த ஐயப்பன், ராஜவேல், பிரதீப் ஆகிய மூவரும் பாலியல் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தலையாமங்கலம் காவல்நிலையத்தில் கையெழுத்திட மூன்று பேரும் சென்றனர்.
அப்போது, உதவி காவல் ஆய்வாளர் கையெழுத்திட வந்த மூவரிடம் அரிவாளை கொடுத்து, அப்பகுதியில் உள்ள கருவேல மரங்களை வெட்டுமாறு உத்தரவிட்டுள்ளார். கருவேல மரங்களை வெட்ட சென்ற அந்த மூவரும் காவல் நிலைய வாசல் முன்பு கையில் அரிவாள் கத்தியோடு நின்று டிக் டாக் செயலியில் மிரட்டும் தொனியில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் அதிகளவில் வைரலானது.
இந்த வீடியோவை பார்த்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மூவரையும் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். தற்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.