காரைக்கால் மாவட்டம் பூவம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (37). இவர் வாய் பேச முடியாத காது கேட்க முடியாத மாற்றுத் திறனாளி ஆவார். இவர், நேற்று( ஜூலை 19) மாலை நாகப்பட்டினம் மாவட்டம் வவ்வாலடியிலுள்ள அவரது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக சரக்கு வாகனம் ஒன்றில் வந்துள்ளார்.
அப்போது உறவினர் வீட்டுக்கு செல்வதற்கு வழி தெரியாத நிலையில், சாந்தியை திருவாரூர் மாவட்டம் கங்களாஞ்சேரியில் இறக்கிவிட்டுள்ளனர்.
அங்கு வெகு நேரமாக நின்று கொண்டிருந்த சாந்தியின் நிலையை உணர்ந்து அந்தப்பகுதி மக்கள் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின் அங்கு வந்து சாந்தியை மகளிர் காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து திருவாரூரில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் நேற்றிரவு ( ஜூலை 19) சாந்தியை தங்க வைத்துள்ளனர். இதற்கிடையில் சாந்தி குறித்து முகநூலில் உள்ள திருவாரூர் மாவட்ட காவல்துறை பக்கத்தில் காவல்துறையினர் புகைப்படத்துடன் தகவல்களை பகிர்ந்தனர்.
இதனை சாந்தியின் சொந்த ஊரான பூவம் பகுதி மக்கள் பார்த்து உடனடியாக சாந்தியின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
இந்தத் தகவலின் அடிப்படையில் அடிப்படையில் சாந்தியின் சகோதரி இன்று(ஜூலை 20) திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து தகவல்களை அளித்து சாந்தியை மீட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: தென்காசி: தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்!