திருவாரூர்: 2023 ம் ஆண்டில் மட்டும் திருவாரூர் மாவட்டத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த 27 ரவுடிகள் மற்றும் 88 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக திருவாரூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திருவாரூர் மாவட்டத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட ரௌடிகளை திருவாரூர் மாவட்ட காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.
ரவுடிகள் மீது பாய்ந்த நடவடிக்கை: அதனடிப்படையில் ரௌடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக 2023 ம் ஆண்டில் மிக முக்கியமான ரௌடிகளான அரவிந்தன், சடையங்கால், செல்வகுமார், குபேரன் பாடலீஸ்வரன், இளையராஜா உட்பட 27 ரௌடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டில், பல்வேறு தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 88 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கடும் நடவடிக்கைகளால் குற்றங்கள் குறைந்தன: கடந்த 2022 ம் ஆண்டில் 20 கொலை வழக்குகள் தாக்கலான நிலையில் 2023 ம் ஆண்டில் 17 கொலை வழக்குகள் தாக்கலாகியுள்ளன. காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளின் மூலம் 2023 ம் ஆண்டில் 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் செயல்பாடுகளுக்கு பாராட்டு: 2023 ம் ஆண்டில் 182 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 199 பேர் கைது செய்யப்பட்டு ரூபாய் 86 லட்சத்து 88 ஆயிரத்து 810 மதிப்புள்ள களவுச்சொத்துக்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
2023 ம் ஆண்டில் கண்டுபிடிப்பு 84 சதவீதம் மற்றும் சொத்து மீட்பு 74 சதவீதம் ஆகவும் உள்ளது. திருட்டு குற்றங்களை தடுப்பதில் மாவட்ட காவல் துறை விழிப்புடன் செயல்படுவதால் பொதுமக்கள் மத்தியில் காவல்துறையின் செயல்பாடுகள் பெருமளவில் பாராட்டப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1,508 CCTV கேமிராக்கள் குற்ற நிகழ்வு நடைபெறும் இடங்களாக கண்டறியப்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் நகை கடைகள், அடகு கடைகள், வங்கிகள் வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்பு சாலை போன்ற இடங்களில் திருட்டு குற்றங்கள் நடவாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வாகனங்கள் ஏலம் விடப்பட்டன: 2023 ம் ஆண்டில் சட்ட விரோமாக மதுக்குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பாக 6,380 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுக்குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 6,433 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 304 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதில் 214 வாகனங்கள் பொது இடங்களில் கேட்பாரற்ற நிலையில் கிடந்தது.
கைப்பற்றப்பட்ட 244 வாகனங்களின் உரிமையாளர்களின் விவரம் தேடியும் கிடைக்காததால் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றியும் அவைகளை அரசுக்கு ஆதாயம் தேடும் வகையில் ஏலம் விடப்பட்டது. 458 வாகனங்கள் ஏலம் விடப்பட்டு ஏலத்தொகைன சுமார் 1 கோடியே 11 லட்சத்து 25 ஆயிரத்து 502 ரூபாய் அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
போதை பொருள் விற்பனை மீது நடவடிக்கை: இவைத்தவிர தொடர் மதுக்குற்றங்களில் ஈடுபட்ட 17 நபர்கள் மீது சட்ட விரோதமாக மதுபானங்களை தயாரித்தல் மற்றும் விற்பனை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறைக்காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இந்திய உணவு கழகத்தில் வேலை..! ரூ.1.5 கோடியுடன் எஸ்கேப்பான இளைஞர் சிக்கியது எப்படி..?
2023 ம் ஆண்டில் பான்மசாலா மற்றும் குட்கா போன்ற அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 3,504 நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது 3488 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 11 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள 176 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கூல்லீப் மற்றும் பான்சாலா போன்ற புகையிலைப் பொருட்களை மீண்டும் மீண்டும் விற்பனை செய்த குற்றத்திற்காக 37 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும் திருவாரூர் மாவட்டத்தில் புகையிலைப் பொருட்கள் மற்றும் போதைப் பொருட்களின் தீமைகள் மற்றும் விளைவுகள் குறித்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் கல்லூரிகள் மற்றும் பள்ளிக்கூடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2023 ம் ஆண்டில் இதுவரை போதைப் பொருட்கள் பற்றிய 1,373 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
சாலை விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை: 2022 ம் ஆண்டு அதிகளவில் விபத்துகளால் உயிரிழப்புகள் இருந்து வந்த நிலையில் சிறப்பு வாகனத்தணிக்கை மற்றும் பல்வேறு சாலை விழிப்புணர்வு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் 2023 ம் ஆண்டு குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் அதிவேகமாக வாகனத்தை ஓட்டியவர்கள் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் சாலை விதிகளை மீறி வாகனங்களை ஓட்டியவர்கள் மீது 3 லட்சத்து 16 ஆயிரத்து 700 வாகன அற்ப வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் குடிபோதையில் வாகணம் ஓட்டிய 715 நபர்களின் ஓட்டுனர் உரிமத்தினை தற்காலிகமாக ரத்து செய்யுமாறு வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துறைக்கப்பட்டுள்ளது.
சைபர் வழக்குகள் மீதும் நடவடிக்கை: சைபர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு திருவாரூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் மாவட்ட காவல் அலுவலகத்தில் தனியாக செயல்பட்டு வருகிறது. 2023 ம் ஆண்டில் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு தொடர்பான 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
2023 ம் ஆண்டில் ரூபாய் 51 லட்சத்து 13 ஆயிரத்து 531 மதிப்புள்ள காணாமல் போன 294 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2023 ம் ஆண்டில் 1,358 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கை: திருவாருர் மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2023 ம் ஆண்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஈடுபட்டவர்கள் மீது 253 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் மற்றும் பௌர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட 6 நபர்கள் மீது குண்டர் தடுப்புச்சுட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு சிறைக்காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
2023 ம் ஆண்டில் பொதுமக்கள் கூடுமிடங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2,802 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டில் சமூக ஊடகப்பிரிவின் மூலம் சமூக ஊடகங்களில் ஆட்சேபகரமான பதிவுகளை பதிவிட்ட 3 நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது பிரச்னைகளை மாவட்ட காவல்துறைக்கு தெரிவிக்கும் வகையில் WhatsApp சேவை 63000 87700, 94981 00855 மற்றும் திருவாருர் மாவட்ட காவல்துறை என்ற தலைப்பில் முகநூல், இன்ஸ்டாகிராம், x தளத்தில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 2024 ம் வருடம் அனைத்து வகையிலும் சிறப்பாக அமைய காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்”, என அவர் கூறினார்.
இதையும் படிங்க: பாழடைந்த வீட்டில் 5 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு..! கர்நாடகாவில் நடந்தது என்ன?