திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 50ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நடவு பணி துரிதமாக நடைபெற்றுவருகிறது. ஒரு சில இடங்களில், நடவு நடுதல், களையெடுத்தல் மற்றும் நாற்று பறிக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கன மழை பெய்துவருவதால் டெல்டா பகுதிக்கு வரவேண்டிய தண்ணீர் மேட்டூர் அணையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சம்பா சாகுபடி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. போர்வெல் வைத்துள்ள விவசாயிகள் மட்டுமே சம்பாவில் ஈடுபட்டுள்ளனர். மற்ற சிறு குறு விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "எந்தெந்த பகுதிகளுக்கு தண்ணீர் தேவை என அந்தந்த பகுதிகளை பொதுப்பணித் துறை அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து தண்ணீர் வழங்குவதற்க்கான நடவடிக்கை மேற்கொண்டு தண்ணீர் வழங்கிட வேண்டும். குறிப்பாக நீர்வளத் துறையை வேளாண் துறையுடன் இணைத்து செயல்பட்டால் மட்டுமே விவசாயிகள் பலன் பெற முடியும்.
தற்போது மேட்டூர் நீரை நம்பி நடைபெறும் சம்பா பணிகள் முழுவதும் தடைப்பட்டு பாதியில் நிற்பதால் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: 2014ஆம் ஆண்டு முதல் மறைந்த மத்திய அமைச்சர்கள் யார் யார்?