திருவாரூர் அருகே அமைந்துள்ள கீழமணலி, வடகரை, மாங்குடி ஆகிய பகுதிகளின் வழியே செல்லும் பாண்டவையாற்றுப் பாசனத்தை நம்பி சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கதிர் வரக்கூடிய நேரத்தில் உரம் போடுவதற்கு ஏற்ற அளவில் தண்ணீர் வராததால் பயிர்கள் முழுவதும் கருகி வருகின்றன.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “விவசாயமே எங்களது வாழ்வாதாரம். ஆனால், மேட்டூர் அணை தண்ணீர் ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட்டும் இன்று வரை எங்கள் பகுதிக்கு வந்து சேரவில்லை. முழுவதுமாக மேட்டூர் அணை நீரை நம்பி குறுவை சாகுபடியில் நாங்கள் ஈடுபட்டு வந்த நிலையில், மழையும் சரிவர பெய்யாததால் நெற்பயிர்கள் முழுவதும் கருகத் தொடங்கியுள்ளன. மேட்டூர் தண்ணீரை முறை வைத்து அனுப்புவதால்தான் தண்ணீர் எங்கள் பகுதிகளுக்கு வருவதில்லை.
ஏக்கருக்கு 25 முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்தும் அதற்கான லாபம் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் தற்போது இருக்கிறோம். கதிர் வரக்கூடிய, உரம் போடுவதற்கு காத்திருக்கும் நேரத்தில் தண்ணீர் இல்லை. மேட்டூர் அணை தண்ணீர் திறந்து முப்பது நாள்களாகியும் எங்கள் பகுதிக்கு இன்றுவரை ஒரு சொட்டு நீர் கூட வந்து சேரவில்லை. முறை வைக்காமல் கூடுதலாக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும்” என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:500 ஏக்கர் நேரடி நெல் விதைப்புகள் தண்ணீரின்றி கருகும் அவலம்!