திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேயுள்ள திருவிடைச்சேரி கோயில் பத்து கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர். இக்கிராமத்தின் வழியாக புத்தாறு செல்கிறது. இக்கிராமத்தில் இறந்தவர்களின் உடல்களை ஆற்றின் அந்தப்பக்கம் உள்ள சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல பாதை இல்லாததால், ஆற்றில் இறங்கி செல்லும் அவல நிலை உள்ளது.
மேலும், மலைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் செல்லும்போது ஆற்றில் நீந்தியபடியே இறந்தவர்களின் உடல்களை கொண்டு சென்று அடக்கம் செய்துவருகின்றனர். இவ்வூர் மக்கள் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக இப்பிரச்னையை எதிர்கொள்கின்றனர். இது தொடர்பாக பல முறை அரசிடம் முறையிட்டுள்ளனர். இருப்பினும், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
ஆற்றின் மறுபகுதிக்கு மேற்கே வடவேர் கிராமம் வழியாக சென்றால் ஐந்து கிலோமீட்டரும், கிழக்கே திருவிடைச் சேரி வழியாக சென்றால் நான்கு கிலோ மீட்டர் தூரமும் சுற்றிச் செல்லவேண்டும்.
அரசிடம் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், ஊர் மக்களே இணைந்து வீட்டிற்கு 1000 ரூபாய் என வசூலித்து புத்தாற்றின் குறுக்கே மூங்கில்கள் தட்டிப்பாலத்தை அமைத்துவருகின்றனர்.
இதையும் படிங்க: சுடுகாட்டிற்கு செல்ல பாதையில்லை: சடலத்தை ஆற்றில் சுமந்து சென்ற அவலம்!