திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் நடைபெற்ற கரோனா மருத்துவ முகாமில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள் என அனைத்து தரப்பினரோடு பள்ளிக்கல்வித் துறை தொடர்ந்து ஆலோசித்துவருகிறது. மேலும், முதலமைச்சரிடம் கலந்ததாலோசித்த பிறகு பள்ளிகள் திறப்பது குறித்த முடிவை அவர் அறிவிப்பார்.
கனிமொழி எம்பி விமான நிலையத்தில் இந்தியரா எனக் கேட்ட விவகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதனைக் கனிமொழி வரவேற்றுள்ளார். தமிழ்நாட்டில் முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகின்றனர். அமைச்சர்களும் அதற்கு உறுதுணையாக இருந்து வருகிறோம்” என்றார்.
இதையடுத்து செய்தியாளர்கள் அமைச்சர் காமராஜரிடம் அடுத்த முதலமைச்சர் யார் என்று கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், ”செல்லூர் ராஜூவிடம் கேட்க வேண்டிய கேள்வியை, என்னிடம் கேட்பதில் நியாயம் இல்லை. செல்லூர் ராஜூ பேசியதற்கு அவரிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும்" என்றார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு, சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு எம்எல்ஏக்கள் கூடி யாரை முதலமைச்சராக தேர்ந்தெடுப்பார்களோ அவர்தான் முதலமைச்சர் ஆவார் என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க: குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கரோனா!