தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் 485 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 12 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 144 தடை உத்தரவு தொடர்ந்து இன்று 12ஆவது நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவாரூர் அண்ணா சாலையில் செயல்பட்டு வந்த மீன் மார்க்கெட் முழுவதும் தற்போது பழைய பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் மீன் வாங்குவதற்கு குவிந்ததால் கரோனா தொற்று அபாயம் ஏற்பட்டது.
இதனைக் கருத்தில் கொண்டு அண்ணா சாலையில் செயல்பட்டு வந்த மீன் மார்க்கெட் மற்றும் நகரப் பகுதிகளில் செயல்பட்டு வந்த சிறு சிறு மீன் விற்பனை கடைகள் அனைத்தும் இன்று திருவாரூர் பழைய பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்படும் என நகராட்சி ஆணையர் சங்கரன் அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை ஆறு மணிக்கு மீன் மார்க்கெட் அனைத்து பழைய நிலையத்திற்கு மாற்றம் செய்யபட்டது.
பின்பு மீன் விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொண்ட சங்கரன் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து முகக் கவசங்கள், கையுறைகள் அணிந்து மீன்களை விற்பனை செய்யவும், வாங்கிச் செல்லவும் பொதுமக்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் அறிவுறுத்தினார். இந்த மீன் மார்க்கெட் மாற்றத்தினால் கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டு சமூக இடைவெளி விட்டு மீன்களை மக்கள் வாங்கிச் செல்கின்றனர். மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு மீன்கள் வழங்கக்கூடாது என மீன் வியாபாரிகளிடம் ஆணையர் தெரிவித்தார்.