திருவாரூர்: தண்டலை ஊராட்சியில் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு மருத்துவம் பார்ப்பதற்காக திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் வருகின்றனர்.
மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை, உள் நோயாளிகள், புற நோயாளிகள் என அனைவரும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகள், சலீன் பாட்டில், பஞ்சு உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளும், அதனுடன் சேர்ந்து சாக்கடைக் கழிவு நீரும் மருத்துவமனைகளை சுற்றி ஓடுவதால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
நோயாளிகளால் பயன்படுத்தப்படும் கழிவுகளான துணி, முடி, பிளாஸ்டிக் பாட்டில், பாலிதீன் பைகள் போன்றவற்றை மருத்துவமனையின் பின்புறத்தில் வீசி செல்வதால் அங்கு வரும் ஆடு, மாடுகள் அவற்றை மேயும்போது அவை இறக்கும் அபாயமும் ஏற்படுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ”திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு சாக்கடைக் கழிவு நீர் சூழந்து காணப்பட்டு வருகிறது.
இதனால் மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகள் இரவு நேரத்தில் கொசுத் தொல்லையால் தூங்க முடியாமலும், டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படும் அபாயத்துடனும் உள்ளனர்.
கழிவுநீரை அப்புறப்படுத்த பலமுறை கோரிக்கை விடுத்தும் மாவட்ட நிர்வாகமும் மருத்துவ நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகிறது. திருவாரூர் அரசு மருத்துவமனை கொசு உற்பத்தி செய்யும் தொழிற்சாலை. இங்கு மருத்துவம் பார்க்க வருபவர்கள் புதிய நோயை வாங்கிச் செல்கின்றனர்.
எனவே மருத்துவம் பார்க்க வரும் நோயாளிகளின் நிலையை கவனத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் உரிய கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதையும் படிங்க: திருவாரூரில் இடுகாட்டிற்குச் செல்ல சாலை வசதி கேட்டு மக்கள் கோரிக்கை