திருவாரூர்: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5ஆம் தேதி சட்டப்பேரவையில் கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற 2,110 கோடி ரூபாய் மதிப்பிலான அனைத்துக் கடன்களையும் 110 விதியின்கீழ் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பால் 60 விழுக்காடு விவசாயிகள் மட்டுமே பயன்பெறுவார்கள். மீதமுள்ள 40 விழுக்காடு விவசாயிகள் பலன்பெற மாட்டார்கள் என விவசாயிகள் கூறுகின்றனர்.
மேலும் இது குறித்துப் பேசிய விவசாயிகள், "கூட்டுறவுக் கடன்கள் அனைத்துத் தள்ளுபடி செய்யப்படும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இதில் 60 விழுக்காடு விவசாயிகள் மட்டும் பயனடைவார்கள். மீதமுள்ள 40 விழுக்காடு விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்றுள்ளதால் அவர்களின் கடன்கள் ரத்துசெய்யப்படாமல் உள்ளன.
மேலும் கூட்டுறவு வங்கியில் 2017ஆம் ஆண்டு விவசாயிகள் பெற்றிருந்த பயிர்க்கடன்களை மத்திய கால கடனாக மாற்றியமைக்கப்பட்டதால் தற்போதுவரை நிலுவையில் உள்ள அந்தக் கடன்களைத் தள்ளுபடி செய்ய இத்திட்டம் பொருந்தாது என அரசு கூறிவருகிறது.
மேலும் கஜா புயலின்போது மிகப்பெரிய அளவில் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் கடன்களைத் தள்ளுபடிசெய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கைவிடுத்து வந்த நிலையில், கடன் நிலுவைத் தொகைகள் அனைத்தும் அப்போதிலிருந்து மூன்று ஆண்டுகளில் மூன்று தவணைகளாக வட்டியுடன் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், அந்தக் கடன்களை விவசாயிகள் தற்போதுவரை திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்துவருவதால் கூட்டுறவுச் சங்கங்களில் மீண்டும் கடன்பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் நலனைக் கருத்தில்கொண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வழங்கப்பட்ட விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி முழுமையாகத் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என முதலமைச்சரிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.