திருவாரூர்: திருவாரூரில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து பல்வேறு இடங்களில் குறுவை பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில் குறுவை சாகுபடிக்கான பயிர்க் காப்பீட்டு தொகையினை, இதுவரை அறிவிக்காமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருவதால் விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
மெளனம் காக்கும் ஒன்றிய அரசு
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “இந்தாண்டு மாவட்டம் முழுவதும் அதிகளவில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். குறுவை சாகுபடி தொடங்கி 60 நாள்களுக்குள் பயிர்க் காப்பீடு தொகை அரசு அறிவிக்க வேண்டும். ஆனால் அறுவடைப் பணிகள் தொடங்கி விட்ட நிலையிலும், இதுவரை பயிர் காப்பீட்டு தொகை அறிவிக்காமல் ஒன்றிய அரசு மெளனம் காத்து வருகிறது.
மேலும் வருடா வருடம் குறுவை பயிர்காப்பீட்டு தொகையை ஜூன் 31-ஆம் தேதிக்குள் பிரிமியம் தொகையாக ரூபாய் 650 கட்ட வேண்டும். அதனையே நம்பிய 20 விழுக்காடு விவசாயிகள் பிரீமியம் செலுத்தி உள்ளனர். ஆனால் பயிர் காப்பீட்டுத் தொகையும் இதுவரை அறிவிக்காமல் இருந்து வருகின்றனர்.
எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, உடனடியாக பயிர் காப்பீட்டு தொகையினை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு