கரோனா நோய்த் தொற்று பரவும் அச்சம் காரணமாக தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.
இருப்பினும் அத்தியவசியப் பொருள்கள் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக விவசாயத்திற்கு விலக்கு அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை ஏற்று விவசாய தொழில் செய்ய முற்படும் விவசாயிகளுக்கு தற்போது ஏமாற்றம் மட்டுமே மிச்சமாக உள்ளது.
சிறு, குறு விவசாயிகளும் விவசாய தொழில் செய்ய முடியாத அளவுக்கு விதை நெல் தட்டுப்பாடு, உரத் தட்டுப்பாடு, தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் விவசாயப் பணியை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
இது குறித்து திருவாரூர் மாவட்டம் இளவங்கார்குடியைச் சேர்ந்த விவசாயி கூறுகையில், "இரண்டு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்து வருகிறேன். தற்போது கோடை சாகுபடி செய்ய விதை நெல் வாங்குவதற்காக சென்றால் வேளாண் துறையில் விதை நெல் கிடைக்கவில்லை. தனியாரிடம் வாங்கச் செல்வதற்கு வாகனங்களை காவல் துறையினர் அனுமதிப்பதில்லை.
இது தவிர விவசாயப் பணிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கோடை சாகுபடி செய்ய முடியாத பல்வேறு பிரச்னைகளை தினம்தோறும் சந்தித்து வருகிறேன். இதே நிலையில் அந்தப் பகுதிகளில் பல விவசாயிகளும் விவசாயப் பணி மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.
அத்தியாவசியப் பணிகள் பட்டியலில் சேர்த்து அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு அறிவித்தாலும் ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி ஆங்காங்கே விவசாய வாகனங்களை திருப்பி அனுப்பும் சூழல் இருப்பதால் விவசாய பணிகளை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர். கரோனா வைரஸ் சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கி போட்டுள்ளது என்பதற்கு இது ஒரு சான்றாகும்.
இதையும் படிங்க:கரோனா எதிரொலி - வெறிச்சோடிய நாகை பத்திரப்பதிவு அலுவலகம்